திருமணமாகாத பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வெள்ளிக்கிழமை விரதம்

0


திருமணமாகாத பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மானசீகமாக அம்மனை வேண்டி, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.

திருமணமாகாத பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார். இந்த ஆண்டு ஜூலை 21, 28, ஆகஸ்டு 4, 11-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருகிறது.

வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.

இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். அன்று பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

Leave a Reply